NDA நுழைவுத் தேர்வு

பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து பட்டமும் வழங்கி, முப்படைகளில் வேலையும் அளிக்கிறது புனேயில் உள்ள நேஷனல் டிபன்ஸ் அகாதெமி. இங்கு, அடுத்த ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் நேஷனல் டிபன்ஸ் அகாதெமி மற்றும் நேவல் அகாதெமி தேர்வை எழுத வேண்டும்.


ராணுவத்தில் அதிகாரிகளை உருவாக்குவதற்காக புனேயில் கண்டக்வாஸ்லா ஏரி அருகே உள்ள பிரமாண்டமான வளாகத்தில் செயல்பட்டு வருகிறது நேஷனல் டிபன்ஸ் அகாதெமி. இங்கு படித்த மாணவர்கள், பாதுகாப்புப் படையின் பல்வேறு பிரிவுகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்து, இந்தக் கல்வி நிறுவனத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். நேஷனல் டிபன்ஸ் அகாதெமியில் உள்ள ராணுவப் பிரிவின்கீழ் 195 இடங்களும் கடற்படைப் பிரிவின்கீழ் 39 இடங்களும் விமானப்படைப் பிரிவின் கீழ் 68 இடங்களும் உள்ளன. இதுதவிர, நேவல் அகாதெமியில் 55 இடங்கள் உள்ளன. நேஷனல் டிபன்ஸ் அகாதெமியில் சேரும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் மாணவர்களது படிப்பைப் பொருத்து பி.ஏ. அல்லது பி.எஸ்சி. பட்டங்களை தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வழங்கும். நேவல் அகாதெமியில் சேரும் மாணவர்கள் 4 ஆண்டு பி.டெக். படிப்பில் சேர்க்கப்படுவார்கள். இப்படிப்பை முடித்ததும் இருக்கும் காலி இடங்களின் எண்ணிக்கையைப் பொருத்து கடற்படையில் எக்ஸிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவு பணிகளில் சேர்க்கப்படுவார்கள்.

பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களும் தரைப்படையில் சேரலாம். கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளில் சேர, பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ படித்து வரும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் இந்தியப் பிரஜையாக இருக்கவேண்டும். திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டாலும், பயிற்சி முடியும் வரை விண்ணப்பதாரர் திருமணம் செய்யக்கூடாது என்ற விதிமுறையும் உள்ளது. 1995-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது 1998-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குப் பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு உடல் தகுதியும் முக்கியம். விண்ணப்பதாரர்கள் தாங்கள் என்.டி.ஏ.வில் சேருவதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா அல்லது நேவல் அகாதெமியில் சேர்ந்து படிக்க முன்னுரிமை கொடுக்கிறார்களா என்பதையும் குறிப்பிட வேண்டும். அத்துடன் என்.டி.ஏ.வில் எந்தப் பிரிவில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள் என்பதையும், தங்களது முதல் விருப்பம் என்.டி.ஏ.வில் படிப்பதா அல்லது நேவல் அகாதெமியில் படிப்பதா என்பதைப் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

நேஷனல் டிபன்ஸ் அகாதெமி மற்றும் நேவல் அகாதெமி தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இத்தேர்வில் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் இரண்டரை மணி நேரம் நடைபெறும் கணிதப் பாடத் தாளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட்டுக்கு இரண்டரை மணி நேரம். இதற்கு 600 மதிப்பெண்கள்.

கணிதத்தில் அல்ஜிப்ரா, மேட்ரிக்ஸ் அண்ட் டெட்டர்மினன்ட்ஸ், ட்ரிகினாமெட்ரி, அனலிட்டிக்கல் ஜியாமெட்ரி, டிபரன்ஷியல் கால்குலஸ், இன்டகிரல் கால்குலஸ் அண்ட் டிபரன்ஷியல் ஈக்குவேஷன்ஸ், வெக்டர் அல்ஜிப்ரா, ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அண்ட் புராபபிலிட்டி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து வினாக்கள் இருக்கும். ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட்டில் பகுதி-ஏ பிரிவில் ஆங்கிலம் தொடர்பான வினாக்கள் இருக்கும். இதற்கு 200 மதிப்பெண்கள். பகுதி-பி பிரிவில் பொது அறிவு தொடர்பான வினாக்கள் இருக்கும். இயற்பியல், வேதியியல், பொது அறிவியல், சமூக அறிவியல், புவியியல், நடப்புச் செய்திகள் (கரண்ட் ஈவென்ட்ஸ்) ஆகியவை கொண்ட பொது அறிவுப் பிரிவுக்கு 400 மதிப்பெண்களாகும். அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும் இந்தத் தேர்வில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். உடற்தகுதித் தேர்வும் மருத்துவ சோதனையும் உண்டு. அதிலும் தகுதி பெறும் மாணவர்கள் மட்டுமே நேஷனல் டிபன்ஸ் அகாதெமியில் சேர முடியும். இப்படிப்பில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மாணவர்களுக்கு தங்குமிடமும் உணவு வசதியும் சீருடை மற்றும் புத்தகங்களும் இலவசம். இங்கு படிக்கச் சேரும் மாணவர்கள் படிப்பை இடையிலேயே விட்டுச் செல்வதாக இருந்தால் பயிற்சிக் கட்டணத்தை அரசுக்குச் செலுத்திய பிறகே படிப்பை விட்டுவிட்டுச் செல்ல முடியும். இதுகுறித்து இப்படிப்பில் சேரும்போதே இதற்கான ஒப்பந்தத்தில் மாணவரும் பெற்றோரும் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தத் தேர்வு வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு இருக்கும். தகுதியுடைய மாணவர்கள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செயப்படுவார்கள்.

இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் ஜூன் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஜேசிஓ, என்சிஓ, ஓஆர் போன்ற அதிகாரிகளின் குழந்தைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இத்தேர்வு குறித்த தகவல்களும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய முறை குறித்த விவரங்களும் இணைய தளத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விவரங்களுக்கு: www.upsconline.nic.in