நர்சரி வகுப்புகளுக்கும் அரசின் அங்கீகாரம் தேவை: உயர் நீதிமன்றம்


நர்சரி பள்ளி வகுப்புகளை நடத்துவதற்கும் அரசின் அங்கீகாரம் அவசியம் தேவை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன் அளித்த தீர்ப்பில், 'தமிழ்நாட்டில் காளான்களைப் போல நர்சரிப் பள்ளிகள் பெருகி வருகின்றன. இந்த சூழலில் நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் தேவையில்லை என மனுதாரர் கூறுவதை ஏற்றுக் கொண்டால் எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல் ஏராளமான நர்சரி பள்ளிகள் செயல்படத் தொடங்கிவிடும். 

நர்சரி பள்ளி மாணவர்கள்தான் பிற்காலத்தில் மேல் வகுப்புகளுக்கு செல்லப் போகின்றனர். ஆகவே, நர்சரி பள்ளிகளிலும் தேவையான அனைத்து வசதிகளும் இருப்பது அவசியம்.

கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீ விபத்து உள்பட மிகவும் வருந்தத்தக்க பல அசம்பாவித நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. அத்தகைய நிகழ்வுகள் இனியொரு முறை நடைபெறக் கூடாது.

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தவே 1973-ஆம் ஆண்டின் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. தொடக்கப் பள்ளி வகுப்புகளுக்கு முந்தைய வகுப்புகளுக்கும் அங்கீகாரம் பெற வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது. அதனால், நர்சரி பள்ளிகள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்க கல்வித் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று மனுதாரர் கூறுவதை ஏற்க இயலாது.

இந்தச் சூழலில், தங்களின் நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் கோரி தேவையான ஆவணங்களுடன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்க மனுதாரருக்கு உரிமை அளிக்கப்படுகிறது. 

ஒருவேளை ஏற்கெனவே மனுதாரர் விண்ணப்பம் அளித்திருந்தால் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அந்த விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து உரிய முடிவினை அறிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 30 நாள்களுக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும்' என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

முன்னதாக, கோவை ஆச்சார்யா கல்வி பொது அறக்கட்டளை சார்பில் அதன் தலைமை அறங்காவலர் ஜெ.அரவிந்தன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 'எங்கள் அறக்கட்டளை சார்பில் ஆச்சாரியா பால சிக்சா மந்திர் என்ற பெயரில் கோவை நகரில் கணபதி, ஆவாரம்பாளையம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 3 இடங்களில் மழலையர்களுக்கான விளையாட்டுப் பள்ளிகளை நடத்தி வருகிறோம். எங்கள் பள்ளியில் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மட்டுமே பயில்கின்றனர்.

இந்நிலையில் பள்ளிக்கான அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பிக்கும்படி கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கடந்த ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதன்படி நாங்களும் தேவையான ஆவணங்களை இணைத்து, பள்ளிக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பம் அளித்தோம். அந்த விவகாரம் தற்போதும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முன் உள்ளது.

இந்தச் சூழலில் எங்கள் பள்ளிகள் அங்கீகாரம் பெறாதவை என்று கூறி, பள்ளிகளை மூடுமாறு மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் இம்மாதம் 10-ஆம் தேதி கூறியுள்ளார். 2009-ஆம் ஆண்டின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம் என்று அந்த உத்தரவில் கூறியுள்ளார். ஆனால் இந்த நிபந்தனை நர்சரி பள்ளிகளுக்குப் பொருந்தாது. ஆகவே, பள்ளிகளை மூடுமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.