அரசுத் தேர்வுகளுக்கான வெற்றி ஃபார்முலா!

மத்திய மற்றும் மாநில அரசுத் தேர்வுகள் எவையாக இருந்தாலும் வெற்றிபெறுவதற்கான எளிமையான ஃபார்முலாக்கள் இவை...

* தேர்வுக்கு முந்தைய நாள் படிப்பது கதைக்கு ஆகாது. தினமுமே குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிப் படியுங்கள்!

* கணிதத் தாள்களுக்குத் தினமும் 'வொர்க் - அவுட்' செய்வது மிகவும் அவசியம்!

* ஆங்கில அறிவு, ரீசனிங், கணிதம், பொது அறிவு, சமீபகாலச் செய்திகள் ஆகியவற்றில் இருந்து பரவலாகக் கேள்விகள் கேட்கப்படுவதால், ஒவ்வொரு பாடத்துக்கும் தனியாக டைம்-டேபிள் போட்டுப் படிப்பது நல்லது!

* அவ்வப்போது உங்கள் மூளையைக் கூர்மைப்படுத்திக்கொள்ள குறுக்கெழுத்து, புதிர்கள் போன்றவற்றைப் பழகிப் பாருங்கள்!

* பொதுவாக, போட்டித் தேர்வுகள் 'ஆப்ஜெக்டிவ் டைப்' கேள்விகளாகத்தான் இருக்கும். முதலில் தெரிந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை அளித்துவிடுங்கள். குத்துமதிப்பாக, டிக் செய்ய வேண்டாம். சில தேர்வுகளில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மார்க் உண்டு. உஷார்!

* சரியான விடைக்கு மிக அருகில் இருப்பதாக இருந்தால் மட்டுமே யூகத்தைத் தேர்ந்தெடுங்கள். இல்லையேல், அந்தக் கேள்வியை விட்டுவிடுவது நல்லது!

* வங்கி, ரயில்வே, எஸ்.எஸ்.சி., போன்று பல தேர்வுகளுக்குத் தனித் தனியாகப் பயிற்சிப் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. இணையத்தில் பழைய கேள்வித் தாள்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றை வைத்துப் பயிற்சி மேற்கொள்வதே பலே பலன் அளிக்கும்!

* தெரியாத, புரியாத, குழப்பமான பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பயிற்சி எடுத்துக்கொள்வது பயன்தரும்!

* உங்களைப் போலவே போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சேர்ந்து குரூப் ஸ்டடி மேற்கொள்ளலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடப் பிரிவைப் படித்து, அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது நேரமும் மிச்சம், மற்றவர் களுக்கு உதவியதுபோலவும் இருக்கும்!

* நாள் தவறாமல் தினமும் செய்தித்தாள்கள் படிப்பது மிகவும் அவசியம்!

அரசுத் தேர்வுகள்... சில விளக்கங்கள்!

* அரசுப் பணிகளிலோ வேறு தனியார் நிறுவனங்களிலோ பணிபுரிந்துகொண்டே எந்த அரசுத் தேர்வையும் எழுதலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் அரசுத் தேர்வு எழுத முடியும்.

* 'என்னதான் மாய்ந்து மாய்ந்து தேர்வு எழுதினாலும் வேலையில் சேர லஞ்சம் கொடுக்க வேண்டும்!' என்பதில் உண்மை இல்லை. அப்படியான சம்பவங்கள் மிக மிகச் சிலவே. எனவே, தகுதியின் மீது நம்பிக்கைவைத்துத் தேர்வுக்குத் தயாராகுங்கள்!

* அரசுத் தேர்வுகளுக்கான வயது வரம்பு 21-30. யு.பி.எஸ்.சி தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 33 ஆகவும் எஸ்.சி/எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 35 ஆகவும் தளர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி ஆகியோருக்கு 35 ஆக வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது!

* அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த பிறகு அரசு நியமிக்கும் இடத்தில்தான் பணிபுரிய முடியும். ஆனால், பின்னால் இடமாறுதல் பெற்றுப் பணி புரியலாம்!

மத்திய மற்றும் மாநில அரசுத் தேர்வுகளின் விளம்பரங்கள் பெரும்பாலான நாளிதழ்களில் வெளியாகின்றன. மற்றும் தொடர்புடைய இணையதளங்களிலும் வெளியாகின்றன. டி.என்.பி.எஸ்.சி-யின் இணையதளம் new.tnpsc.gov.in. யு.பி.எஸ்.சி-யின் இணையதளம் new.upsc.gov.in.